பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி மீண்டும் ஆலோசனை

புதுவை மாநிலத்துக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

Update: 2019-06-18 00:30 GMT
புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாததால் கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான அரசின் செலவினத்துக்கு 5 மாதத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.

தேர்தல் முடிந்துள்ள நிலையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் நாராயணசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக கடந்த 13-ந்தேதி அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோருடன் அவர்கள் வகித்து வரும் துறைகள் சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் டெல்லி சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி கடந்த 15-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். பின்னர் புதுச்சேரி திரும்பிய நிலையில் நேற்று அமைச்சர் ஷாஜகான் வகிக்கும் துறை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், அரசு செயலாளர்கள் அன்பரசு, பார்த்திபன், ஆலிஷ்வாஸ், விவேக்பாண்டா, அபிஜித் விஜய் சவுத்ரி, தேவஷ்சிங், கலெக்டர் அருண் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிப்பது, அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்