ஓட்டப்பிடாரம் அருகே பயங்கரம், இளம்பெண் வெட்டிக்கொலை - கணவருக்கு போலீஸ் வலைவீச்சு

ஓட்டப்பிடாரம் அருகே இளம்பெண்ணை வெட்டிக்கொலை செய்த கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-06-17 23:15 GMT
ஓட்டப்பிடாரம், 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எப்போதும் வென்றான் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பழனிமுருகன் (வயது 43), கார் டிரைவர். இவருடைய மனைவி காசி ராமுத்தாய் (37). இவர்களுக்கு ‌‌ஷர்மிளா (19) என்ற மகளும், முத்துமகே‌‌ஷ் (15), தமிழ்செல்வம் (11) என்ற மகன்களும் உள்ளனர். ‌‌ஷர்மிளா அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் அதே பகுதியில் கணவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் பழனிமுருகனுக்கும், காசி ராமுத்தாய்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் காசி ராமுத்தாய் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது மகன்களை அழைத்துக்கொண்டு சிந்தலக்கட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பள்ளிக்கூடம் திறந்ததால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவர் மகன்களுடன் வீட்டுக்கு திரும்பினார். அவர் வீட்டுக்கு வந்த பின்னரும் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் பழனிமுருகன் தனது மகள் ‌‌ஷர்மிளா வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று அதிகாலையில் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன், மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பழனிமுருகன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து காசி ராமுத்தாயை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் பழனிமுருகன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து எப்போதும் வென்றான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காசி ராமுத்தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற பழனிமுருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

குடும்ப தகராறில் மனைவியை கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது.

மேலும் செய்திகள்