எரிவாயு கொண்டு செல்ல விவசாய நிலங்கள் வழியாக குழாய் அமைக்கக்கூடாது - கலெக்டரிடம் மனு

எரிவாயு கொண்டு செல்ல விவசாய நிலங்கள் வழியாக குழாய் அமைக்கக்கூடாது என்று கலெக்டரிடம் விவசாய சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2019-06-17 22:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தூத்துக்குடி தபால்தந்தி காலனி மக்கள் நல சங்கத்தினர் நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

எங்கள் காலனியில் சுமார் 2 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. எங்கள் பகுதிக்கு கடந்த 30 ஆண்டுகளாக சரிவர குடிநீர் வழங்கப்படாத நிலை இருந்து வருகிறது. எங்கள் பகுதிக்கு 4-வது குடிநீர் குழாய் திட்டத்தின் கீழ் தண்ணீர் வழங்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியானது பாரதி நகரில் அமைந்துள்ளது. இதனால் அங்கிருந்து தண்ணீர் திறந்து விடும்போது எங்கள் பகுதிக்கு முழுமையாக தண்ணீர் வருவதில்லை. எனவே எங்கள் பகுதியின் தண்ணீர் தேவைக்காக எங்கள் காலனியின் மத்திய பகுதியில் உள்ள சமுதாய கூடம் அருகே ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா சோனகன்விளையை சேர்ந்த இளையபெருமாள் மகன் தர்மராஜ் நேற்று காலையில் தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் வரும்போது கையில் மண்எண்ணெய் கேனுடன் வந்தார். இதனை அறிந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறித்தனர். தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

அந்த மனுவில், எனது தந்தை இளையபெருமாள் திருச்செந்தூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தனக்கு சொந்தமான டிராக்டரை அடமானம் வைத்து விவசாயத்துக்காக கடன் வாங்கி இருந்தார். அவர் அந்த கடனுக்கான மாத தவ ணையை சரியாக கட்டி வந்தார். இடையில் அவர் இறந்துவிட்டார். இதனையடுத்து அந்த கடன் தொகையை நான் அடைத்து வந்தேன். இந்த நிலையில் தவணை சரியாக கட்டவில்லை என கூறி டிராக்டரை எடுத்து சென்ற தனியார் நிதி நிறுவனத்தினர் அதை ஏலம் விட்டுவிட்டனர். இதுகுறித்து கேட்டபோது நிதி நிறுவன அதிகாரிகள் இழிவாக பேசுகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்கள் கொண்டு சென்ற டிராக்டரை திரும்ப பெற்று தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமே‌‌ஷ் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் தரமான மணல் தட்டுப்பாடு, கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டினால் தரமற்ற முறையில் நடைபெறும் அரசு ஒப்பந்த கட்டிட பணிகள், பூங்கா பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் தரமான மணல் பெறுவதற்கு அரசின் அனுமதி பெற்ற ‘எம் சாண்ட்’ மணல் கம்பெனிகளின் விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி முகிலன் மீட்பு கூட்டுஇயக்கத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், சுற்றுச்சூழல் போராளி முகிலன் காணாமல் போய் 121 நாட்கள் ஆகின்றன. அவரை உடனடியாக கண்டுபிடிக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு ஸ்டெர்லைட் நச்சு ஆலையை தூத்துக்குடியில் இருந்து நிரந்தரமாக அகற்றுவதற்கு உடனடியாக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி கீழதட்டப்பாறையை சேர்ந்தவர் தர்மர் மகன் கணேசன் என்பவர் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பலர் வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் இதில் வேலை செய்யாதவர்கள் பெயரை சேர்த்து அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து, இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு பைபர் மற்றும் கட்டுமர மீனவர் சமுதாய நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடியில் நீதிமன்ற உத்தரவை மீறியும், சட்ட விதியை பின்பற்றாமலும் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் சில விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள். அவர்களுக்கு உதவியாக செயல்படும் மீன்வளத்துறை அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், கடந்த மே மாதம் 1-ந்தேதி முதல் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட கிராமசபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கூறி இருந்தனர். அதேபோல் நாம் தமிழர் கட்சி ஓட்டப்பிடாரம் தொகுதி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 7 மதுபான கடைகள் உள்ளன. இதில் 4 கடைகள் பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகில் இயங்கி வருகின்றன. இந்த மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என்று கூறிஇருந்தனர்.

குலையன்கரிசல் கிராம விவசாய சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு விவசாய நிலங்கள் வழியாக குழாய் அமைத்து எரிவாயு கொண்டு செல்ல முயற்சிகள் நடந்து வருகிறது. அவ்வாறு அமைக்கப்பட்ட குழாயில் விபத்து ஏற்பட்டால் பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே தொழிற்சாலைக்கு ஊருக்கு வடக்கே அரசுக்கு சொந்தமான இடத்தின் வழியாக குழாய் அமைத்து எரிவாயு கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்