பெங்களூரு அருகே ஆட்டோ-தனியார் பஸ் மோதல்; சிறுமிகள் உள்பட 4 பேர் பலி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

பெங்களூரு அருகே சாலை பள்ளத்தை தவிர்க்க முயன்றபோது ஆட்டோவின் டயர் கழன்றது. இதனால் அந்த ஆட்டோவும், தனியார் பஸ்சும் மோதியதில் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்ற சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

Update: 2019-06-17 22:00 GMT
பெங்களூரு, 

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி அருகே தேவனஹள்ளி-தொட்டபள்ளாப்புரா ரோட்டில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவே இருந்த பள்ளத்தை தவிர்க்க ஆட்டோ டிரைவர், ஆட்டோவை திருப்பினார்.

அப்போது, திடீரென்று ஆட்டோவின் சக்கரம் ஒன்று கழன்றது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோவும், அந்த சாலையில் வந்த தனியார் பஸ்சும் மோதிக்கொண்டன. இதில் ஆட்டோ முற்றிலுமாக உருக்குலைந்தது. ஆட்டோவில் பயணித்தவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.

இதுபற்றி அறிந்தவுடன் அக்கம்பக்கத்தினர் மற்றும் விஸ்வநாதபுரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் பயணித்த சிறுமிகள் உள்பட 4 பேர் இறந்தது தெரியவந்தது. மேலும் 7 பேர் படுகாயம் அடைந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து படுகாயம் அடைந்தவர்களை மீட்ட போலீசார் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேவனஹள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்களின் பெயர்கள் ஹசினா (வயது 35), ஜோயா (5), சாஜியா (8), சானியா (17) என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகா கிட்டப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் நோக்கி ஆட்டோவில் வந்தபோது விபத்தில் சிக்கி இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து விஸ்வநாதபுரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்