மராட்டிய மந்திரி சபை விஸ்தரிப்பு ராதாகிருஷ்ண விகே பாட்டீல் உள்பட 13 புதிய மந்திரிகள் பதவி ஏற்பு

சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் மராட்டிய மந்திரி சபை நேற்று விஸ்தரிப்பு செய்யப்பட்டது. ராதாகிருஷ்ண விகே பாட்டீல் உள்பட 13 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்.

Update: 2019-06-16 23:45 GMT
மும்பை,

மராட்டியத்தில் மந்திரி சபை விஸ்தரிப்பு குறித்து கடந்த 1 ஆண்டுகளுக்கு மேலாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

ஆனால் பல்வேறு காரணங்களால் மந்திரி சபை விஸ்தரிப்பு செய்யப்படாமல் இருந்தது. இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளநிலையில் மந்திரி சபையை விஸ்தரிப்பு செய்து சொந்த கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்த பா.ஜனதா முடிவு செய்தது.

இதையடுத்து மந்திரி சபை விஸ்தரிப்பு தொடர்பான பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடந்து வந்தன.

இதில் நேற்று முன்தினம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மந்திரி சபை விஸ்தரிப்பு தொடர்பாக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். மேலும் அதன்பிறகு கூட்டணி கட்சி தலைவரான உத்தவ்தாக்கரேயை அவரது வீட்டில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் நேற்று மராட்டிய மாநில மந்திரி சபை 3-வது முறையாக விஸ்தரிப்பு செய்யப்பட்டது. இதில் மும்பை ராஜ் பவனில் நடந்த விழாவில் 8 பேர் கேபினட் மந்திரிகளாகவும், 5 பேர் இணை மந்திரிகளாகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிர மாணம் செய்து வைத்தார்.

இதில், கேபினட் மந்திரிகளாக காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு தாவிய முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த முன்னாள் மந்திரி ஜெய்தத் கிரிஷ்சாகர், மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார், சஞ்சய் குடே, சுரேஷ் காடே, அணில் போன்டே, அசோக் உய்கே, சிவசேனாவை சேர்ந்த தானாஜி சாவந்த் ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்று கொண்டனர்.

தானாஜி சாவந்த் தவிர மற்ற அனைவரும் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

இணை மந்திரிகளாக யோகேஷ் சாகர், அவினாஷ் மகாதேகர், சஞ்சய் என்ற பாலா பெகடே, பரினாய் புகே, அதுல் சாவே ஆகியோர் பதவி ஏற்றனர். இதில் அவினாஷ் மகாதேகர் இந்திய குடியரசு கட்சியை சேர்ந்தவர். மற்ற அனைவரும் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் ஆவர். புதிய மந்திரிகளில் 7 கேபினட், 4 இணை மந்திரிகள் என 11 பேர் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, சபாநாயகர் ஹரிபாபு பாகடே, முன்னாள் முதல்-மந்திரி மனோகர் ஜோஷி, மாநில மந்திரிகள், மும்பை மேயர் விஷ்வனாத் மகாதேஸ்வர், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்