பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.

Update: 2019-06-16 23:00 GMT
பென்னாகரம்,

பென்னாகரம் அருகே நல்லம்பள்ளி ஒன்றியம் எச்சனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காளேகவுண்டனூரில் 700 குடும்பங்கள் உள்ளன. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. ஒகேனக்கல் குடிநீரும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

குடிநீர் பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் பலமுறை எடுத்து சொல்லியும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

சாலைமறியல்

எனவே குடிநீர் வழங்காததை கண்டித்து காளேகவுண்டனூரில் பொதுமக்கள் நேற்று காலை 6 மணியளவில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் எச்சனஅள்ளி ஊராட்சி செயலாளர் தண்டபாணி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குடிநீர் பிரச்சினையை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, தேர்தல் வரை எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வந்து கொண்டிருந்தது. தேர்தலுக்கு பின்னர் சரியான முறையில் குடிநீர் வழங்கப்படவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளோம், எனவே தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

மேலும் செய்திகள்