மின்கசிவால் வீட்டில் தீ: கோலார் மாவட்ட பா.ஜனதா துணை தலைவர் உடல்கருகி சாவு

மின்கசிவால் வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கிய குடும்பத்தினரை காப்பாற்றிய கோலார் மாவட்ட பா.ஜனதா துணை தலைவர் உடல் கருகி இறந்தார்.

Update: 2019-06-16 23:00 GMT
கோலார் தங்கவயல்,

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை டவுனை சேர்ந்தவர் நாகபிரகாஷ்(வயது 58). இவர் கோலார் மாவட்ட பா.ஜனதா துணை தலைவராகவும், பங்காருபேட்டை தாலுகா பா.ஜனதா தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகபிரகாஷ், தனது மனைவி ஷோபா, தந்தை சத்தியநாராயணா, மகன் சொரூப், மருமகள் அங்கிதா ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மின்கசிவு காரணமாக வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மேலும் வீடு முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனால் உடனடியாக எழுந்த நாகபிரகாஷ், தனது தந்தை, மனைவி, மகன், மருமகள் ஆகியோரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

மேலும் ஒவ்வொருவரையும் வீட்டில் இருந்து பத்திரமாக மீட்டு கொண்டு வந்து வெளியே விட்டார். இந்த சந்தர்ப்பத்தில் நாகபிரகாசின் மீது தீப்பிடித்து எரிந்தது. இதில் அவர் உடல்கருகி உயிருக்கு போராடினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நாகபிரகாஷ் இறந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பங்காருபேட்டை போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீட்டில் பிடித்த தீயை தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். மேலும் சம்பவம் குறித்து நாகபிரகாசின் குடும்பத்தினரிடம் போலீசார் கேட்டறிந்து கொண்டனர்.

மேலும் நாகபிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பங்காருபேட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீயில் சிக்கிய குடும்பத்தினரை காப்பாற்றிவிட்டு பா.ஜனதா துணை தலைவர் உயிரை இழந்த சம்பவம் பங்காருபேட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்