துப்பாக்கிக்கான உரிமத்தில் பெயர் மாற்றம் செய்து கொடுக்க லஞ்சம்: ஓய்வுபெற்ற தாசில்தாருக்கு ஒரு ஆண்டு சிறை மங்களூரு லோக் ஆயுக்தா சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
துப்பாக்கிக்கான உரிமத்தில் பெயர் மாற்றம் செய்து கொடுக்க லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வுபெற்ற தாசில்தாருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மங்களூரு லோக் ஆயுக்தா சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மங்களூரு,
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா தாசில்தாரராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் நாராயணராவ். இவர் தற்போது பெங்களூரு எலகங்காவில் வசித்து வந்தார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு பண்ட்வால் தாலுகாவில் பணியாற்றியபோது, பண்ட்வால் டவுனைச் சேர்ந்த சதீஷ் பிரபு என்பவர் தனது தந்தையின் பெயரில் உள்ள துப்பாக்கிக்கான உரிமத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்து தரக்கோரி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த நாராயணராவ், துப்பாக்கிக்கான உரிமத்தில் பெயர் மாற்றம் செய்து கொடுக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஷ் பிரபு இதுபற்றி மங்களூரு லோக் ஆயுக்தா போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் போலீசார் சில அறிவுரைகளை வழங்கி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.3 ஆயிரத்தை சதீஷ் பிரபுவிடம் கொடுத்து, அதை நாராயணராவிடம் கொடுக்குமாறு கூறினர். அதன்பேரில் அவரும் நாராயணராவை சந்தித்து, லஞ்சப் பணத்தை கொடுத்தார். நாராயணராவும் லஞ்சப்பணத்தை வாங்கினார்.
அந்த சந்தர்ப்பத்தில் அங்கு மறைந்திருந்த லோக் ஆயுக்தா போலீசார் நாராயணராவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் மீது மங்களூரு லோக் ஆயுக்தா சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே நாராயணராவ் பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவ்வழக்கின் மீதான விசாரணை நேற்று முன்தினம் மங்களூரு லோக் ஆயுக்தா சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர் பை, வழக்கில் குற்றவாளியான நாராயணராவுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.