சென்னையில் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு, ‘பெண்ணுக்கு ஏற்பட்ட துயரத்தை எங்களால் தாங்க முடியவில்லை’ - கிராம மக்கள் கதறல்
சென்னையில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த துயரத்தை எங்களால் தாங்க முடியவில்லை என்று அந்தப்பகுதி கிராம மக்கள் கண்ணீருடன் கூறினார்கள்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கவுண்டச்சிபாளையம் அருகே உள்ள களியங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மகள் தேன்மொழி (வயது 26), சென்னை சேத்துப்பட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரும், ஈரோடு மொசுவண்ணசந்து பகுதியை சேர்ந்த சுரேந்தர் (27) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் தேன்மொழியும், சுரேந்தரும் நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசி உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியதில் சுரேந்தர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தேன்மொழியை வெட்டினார். மேலும், சுரேந்தர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றார். ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து கிடந்த அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தெரிய கிடைத்ததும் தேன்மொழியின் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களால் துயரத்தை தாங்க முடியாமல் கதறி துடித்தனர். அக்கம் பக்கத்தினர் உறவினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தேன்மொழியை பார்ப்பதற்காக இரவோடு, இரவாக சென்னைக்கு விரைந்தனர்.
சென்னையில் நடந்த இந்த பயங்கர சம்பவம் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது. தேன்மொழிக்கு நடந்த துயரம் பற்றி கிராம மக்கள் பரிதாபப்பட்டனர்.
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சிலர் கூறியதாவது:-
தேன்மொழியின் தந்தை வீரமணி மரம் வெட்டும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கூலி வேலை செய்து அவருடைய 3 மகள்களையும் படிக்க வைத்து உள்ளார். இதில் மூத்த மகளான தேன்மொழி மிகவும் அமைதியான பெண். குடும்பத்தின் ஏழ்மையை உணர்ந்து நன்றாக படித்தவர். டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வை எழுதி வெற்றி பெற்று அரசு வேலையிலும் சேர்ந்து விட்டார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர் சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்திருந்தார். அப்போதுகூட அவர் நான் தங்கைகளின் திருமணத்துக்காக நகை, பணத்தை சேர்த்து வைப்பேன் என்று நம்பிக்கையோடு கூறினார்.
அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட துயர நிலையை எங்களால் தாங்க முடியவில்லை. அதிலும் தேன்மொழி காதல் வயப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறுவதை நம்ப முடியாது. வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினார்கள்.
இதேபோல் தேன்மொழியை அரிவாளால் வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்ற சுரேந்திரனை பார்க்க அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.