திருச்சி சத்திரம் பஸ்நிலையம், தெப்பக்குளம் பகுதிகளில் சாலையோர தரைக்கடைகள், ஆக்கிரமிப்புகள் திடீர் அகற்றம்

திருச்சி சத்திரம் பஸ்நிலை யம் மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் உள்ள சாலையோரக் தரைக்கடைகள், ஆக்கிரமிப்புகள் திடீரென அகற்றப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2019-06-15 23:00 GMT
மலைக்கோட்டை,

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தை அகற்றி விட்டு, அங்கு நவீன முறையில் புதிதாக பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கி விட்டது. பணிகள் முழு வீச்சில் நடைபெறும்போது பஸ்கள் சத்திரம் பஸ் நிலையத்திற்கு செல்ல முடியாது. சாலையோரம் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதற்கான மாற்று ஏற்பாடு நடந்து வருகிறது.

அதற்கு முன்பாக சத்திரம் பஸ் நிலையம் முதல் கரூர் பஸ் நிறுத்தம் வரையுள்ள பகுதியில் உள்ள சாலையோர தரைக்கடைகளை அப்புறப்படுத்தும் பணி நேற்று ஸ்ரீரங்கம் கோட்ட இளநிலை பொறியாளர் ராஜேஷ்கன்னா தலைமையில் நடந்தது. சத்திரம் பஸ் நிலையம், கல்லூரி சாலை, தெப்பக்குளம், கோட்டை நுழைவு வாயில், என்.எஸ்.பி.ரோடு, சின்னக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர கடைகள், கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகள்(சன்சைடு) அகற்றும் பணி நடந்தது.

அதற்காக 3 பொக்லைன் எந்திரம் உதவியுடன் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டனர். திருச்சி தெப்பக்குளத்தையொட்டி உள்ள என்.எஸ்.பி. ரோட்டில் ஓரமாக உள்ள பேன்ஸி ஸ்டோர், செருப்பு கடை, ரெடிமேடு ஜவுளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பு ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த சன்சைடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இதற்கு பர்மா பஜார் வியாபாரிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினார்கள். மேலும் சில கடைகளில் ஷட்டர்களையும் தேவையில்லாமல் மாநகராட்சி பணியாளர்கள் உடைத்ததால் வியாபாரிகள் ஆவேசம் அடைந்தனர். அவர்களுடன் தரைக்கடை வியாபாரிகளும் இணைந்து, கோட்டை நுழைவு வாயில் பகுதியில் திரண்டு திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களிடம் போராட்டத்தை கைவிட்டு கலைந்து போகும்படி தெரிவித்தனர். மேலும் உங்கள் புகாரை மாநகராட்சி ஆணையரிடம் தெரிவியுங்கள் என்றும், எங்களிடம் ஆக்கிரமிப்பு பணிக்கு பாதுகாப்பு கேட்டதால், நாங்கள் வந்துள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில் 500-க்கும் மேற்பட்ட சாலையோர தரைக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது. தெப்பக்குளம் என்.எஸ்.பி. சாலையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் முன்பு ஆக்கிரமித்து போடப்பட்ட மேற்கூரைகள் அகற்றப்பட்டன. இதனால் அந்த கடை கள் அடைக்கப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்