கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் தங்கமணி தகவல்
விவசாயிகளின் கோரிக்கையை முதல்-அமைச்சரிடம் எடுத்துக்கூறி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
பரமத்தி வேலூர்,
பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் துணை கோட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு திருச்செங்கோடு உதவிகலெக்டர் மணிராஜ் தலைமை தாங்கினார். மோகனூர் சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனா் ஜெய்னுலாப்தீன் முன்னிலை வகித்தார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு புதிய துணை கோட்ட அலுவலகத்தை திறந்து வைத்தனர். பின்னர் 3 கரும்பு விவசாயிகளுக்கு சொட்டு நீர், பாசனத்திற்கான பணி ஆணையினையும், ஆலையின் அரவைக்கு தங்கள் விளை நிலத்தில் விளையும் கரும்பினை வழங்குவதற்காக 5 விவசாயிகளுக்கு ஒப்பந்தங்களையும் வழங்கினார்கள்.
விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சா் தங்கமணி பேசியதாவது:-
விவசாயிகள் இப்பகுதியில் விளையும் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கும், தனியார் சர்க்கரை ஆலைகளுக்கும் கொடுத்ததால் ஏற்கனவே இருந்த மோகனூர் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் அலுவலகம் போதிய கரும்பு வராத காரணத்தினால் மூடப்பட்டது.
கூட்டுறவு சா்க்கரை ஆலை அலுவலா்கள் மீண்டும் விவசாயிகளிடம் பேசி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பினை தொடர்ந்து வழங்கினால் உரிய தொகை உடனடியாக வழங்கப்படுகிறது. ஆனால் தனியார் ஆலைகளுக்கு கரும்பினை வழங்கும் போது விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
கடுமையான வறட்சியின் காரணமாக போதிய அளவில் கரும்பு உற்பத்தி செய்யமுடியாத நிலை உள்ளது. ரூ.79.20 கோடி திட்ட மதிப்பீட்டில் சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நாளொன்றுக்கு 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இணை மின் உற்பத்தி நிலையமும், ரூ7.92 கோடி திட்ட மதிப்பீட்டில் ஆலை நவீனமயமாக்கல் திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு பணிகள் முழுவதும் முடிவுற்று பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது.
இணைமின் உற்பத்தி நிலைய கட்டுமான பணிகளில் 75 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு 45 லட்சம் லிட்டா் எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு 40 ஆயிரம் லிட்டா் ஆல்கஹால் உற்பத்தியும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் கூட்டுறவு ஆலையின் வருமானம் அதிகரித்து லாபம் ஈட்ட இயலும்.
கடந்த ஆண்டு ஆலையின் சா்க்கரை பிழி திறன் 8.48 என்ற அளவில் இருந்தது. இந்த ஆண்டு 9.50 ஆக உயா்த்த பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் தனியார் கரும்பு ஆலைகளுக்கு கரும்பை பதிவு செய்வதை மாற்றி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பதிவு செய்து கொண்டு பயன்பெறவேண்டும். மேலும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துக்கூறி விவசாயிகள் பயன்பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இநத விழாவில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகக்குழு தலைவர் சுரேஷ் குமார், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் ஆர்.ஆர்.ராஜேந்திரன், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்க அலுவலர் நவநீதன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜயகுமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.