மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமை தாங்கி வாக்காளர் பட்டியல் தயார் செய்தல், வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்தல், உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான சட்ட முறையிலான படிவங்கள், தேர்தல் பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி அலுவலகம், விழுப்புரம் நகராட்சி அலுவலகம், கோலியனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள படிவங்களை நேரில் பார்வையிட்டு முறையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதா எனவும், ஒவ்வொரு படிவத்திற்கு அதன் விவரம் குறித்த ‘சிலிப்’ வைக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் விழுப்புரம் நகராட்சி அலுவலகம் மற்றும் கோலியனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் கணினி இயக்குபவர்களிடம் தேர்தல் குறித்த விவரங்களை பயிற்சியில் தெரிவித்தவாறு கணினியில் பதிவு செய்யப்படும் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அதன் பின்னர் கோலியனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகளை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி பார்வையிட்டு வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படும் அளவிற்கு சுத்தப்படுத்தப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர்கள் ஜோதி, ரத்தினமாலா, நகராட்சி ஆணையர்கள் லட்சுமி, சையது முஸ்தபா, ஸ்ரீபிரகாஷ், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உடனிருந்தனர்.