திருமணம் ஆகவில்லையே என்ற விரக்தியில் மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

ராசிபுரம் அருகே திருமணம் ஆகவில்லையே என்ற விரக்தியில் மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்ெகாைல செய்து கொண்டார்.

Update: 2019-06-15 22:00 GMT
ராசிபுரம், 

ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அத்தனூர் புதூர் கலர்க்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயி. இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வந்த ராஜ்குமார் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார். பின்னர் அவர் பல்வேறு கம்பெனிகளில் வேலைக்கு சென்று வந்தாலும், நிரந்தரமாக எந்த நிறுவனத்திலும் பணியாற்றவில்லை. இதையடுத்து அவர் வீட்டில் இருந்து கொண்டு பெற்றோருடன் விவசாயத்தை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் ராஜ்குமார் ராசிபுரத்தை சேர்ந்த திருமணம் ஆன முஸ்லிம் பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவருடைய முதல் கணவருக்கு பிறந்த 14 வயது பெண், 10 வயதுள்ள 1 மகன் ஆகியோர் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து அந்த முஸ்லிம் பெண்ணை ராஜ்குமார் வீட்டுக்கு அழைத்து வருகிறேன் என்று அவருடைய தாயார் சிவகாமியிடம் கூறினார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். மேலும் ராஜ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகவும், அவர் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்று அவ்வப்போது மது அருந்திவிட்டு புலம்பி வந்ததுள்ளார். இவ்வாறு இருக்க நேற்று முன்தினம் காலையில் ராஜ்குமார் அவருடைய வீட்டில் இருந்து ராசிபுரத்திற்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

மாலையில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள அரசு மதுபானக்கடை அருகில் மதுவில் விஷத்தை கலந்து குடித்துவிட்டு ராஜ்குமார் மயங்கி கிடந்துள்ளார். இது பற்றி அவருடன் தொடர்பு வைத்திருந்த முஸ்லிம் பெண் ராஜ்குமாரின் தாயார் சிவகாமிக்கு தகவல் தெரிவி்த்தார்.

மயங்கி கிடந்த ராஜ்குமார் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது வரும் வழியிலேயே ராஜ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து ராஜ்குமார் திருமணம் ஆகவில்லையே என்ற விரக்தியில் இருந்து வந்ததாகவும், அதனால் மனம் உடைந்து மதுவில் விஷத்தை கலந்து குடித்துவிட்டு இறந்துவிட்டதாகவும், அது பற்றி நடவடிக்கை எடுக்கும்படியும் இறந்த ராஜ்குமாரின் தாயார் சிவகாமி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இந்த தற்கொலை குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்