நாமக்கல் அருகே காவலாளி வெட்டிக்கொலை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
நாமக்கல் அருகே காவலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள எரையம்பட்டியை சேர்ந்தவர் பழனி (வயது 77). இவர் நாமக்கல்லை அடுத்த முதலைப்பட்டியில் உள்ள தனியார் கார் பட்டறையில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார். எரையம்பட்டியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் தர்மகர்த்தாவாகவும் இருந்து வந்தார்.
இவர் தினமும் மாலை 6 மணிக்கு வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலையும் 6 மணிக்கு வேலைக்கு சென்றார். இரவில் கார் பட்டறையில் தூங்கிக்கொண்டு இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அந்த பட்டறைக்கு வந்த மர்ம ஆசாமிகள் பழனியை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த பழனியை பக்கத்தில் உள்ள பட்டறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே கொலை நடந்த பட்டறையில் ேமாப்பநாய் கொண்டும் போலீசார் துப்பு துலக்கினர்.
இந்த பட்டறையின் உரிமையாளர் மாதேஸ்வரன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முன்னதாக பட்டறையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இந்த வழக்கில் பழனி முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.
எனவே பெட்ரோல் குண்டு வீசிய நபர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.