நெல்லையில் கொள்ளையர்கள் 4 பேர் கைது ரூ.10 லட்சம் மதிப்புள்ள 7 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

நெல்லையில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்த 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-15 21:45 GMT
நெல்லை, 

நெல்லையில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்த 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 7 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

தொடர் திருட்டு 

நெல்லை மாநகர பகுதியில் ஆங்காங்கே மோட்டார் சைக்கிள்கள் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக பாளையங்கோட்டை பகுதியில் வீட்டு முன்பும், சாலையோரங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மாயமாகி விடுகின்றன.

இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி தேடி வந்தனர். மேலும் திருட்டு நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

வலம் வந்தவர் சிக்கினார் 

இதில் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 24) என்பவர் அடிக்கடி வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை நைசாக மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அப்துல் ரகுமான் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது.

4 பேர் கைது 

இதையடுத்து அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்தனர். இதையொட்டி அவர் கொடுத்த தகவலின் பேரில் கோவை கருணாநிதி நகர் முதல் தெருவை சேர்ந்த கணேசன் மகன் பிரவீன்குமார் (30), முகைதீன் பாட்ஷா மகன் பாபு (22), 2–வது தெருவை சேர்ந்த ஜாகீர் உசேன் மகன் ஜான் தாருக் (20) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை கும்பல் நெல்லையில் மோட்டார் சைக்கிள்களை திருடி கோவைக்கு கொண்டு சென்று விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

கோவையில் விற்பனை 

அதாவது, அப்துல் ரகுமானின் உறவினர் கோவையில் இருப்பதும், அங்கு சென்ற போது சிலருடன் ஏற்பட்ட திருட்டு பழக்கத்தால் அவர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் திருடி உள்ளார். அப்துல் ரகுமான் விலை உயர்ந்த புதிய மோட்டார் சைக்கிள்களை நோட்டமிடுவார். பின்னர் கோவையில் உள்ள கூட்டாளிகளுக்கு தகவல் தெரிவித்து நெல்லைக்கு வரவழைப்பார். பின்னர் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று மோட்டார் சைக்கிளை திருடுவார்கள். பின்னர் அதனை விற்பனைக்காக கோவைக்கு கொண்டு சென்று விடுவார்கள். அங்குள்ள மெக்கானிக் பிரரீன்குமார் மூலம் மோட்டார் சைக்கிளில் உள்ள பதிவு எண், என்ஜின் பதிவு எண் ஆகியவற்றை மாற்றி விற்பனை செய்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்