ஐரோப்பிய நாடுகளில் சாயமேற்றப்படாத ஆடைகளுக்கு மவுசு அதிகரிப்பு
ஐரோப்பிய நாடுகளில் சாயமேற்றப்படாத ஆடைகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இதுபோல் திருப்பூரிலும் ஆடை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர்,
திருப்பூரில் பலர் ஆடை தயாரிப்பு தொழிலை செய்து வருகிறார்கள். இதனால் திரும்பும் திசையெங்கும் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு தொழில்துறையினரும் தங்களது வர்த்தகத்திற்கு உகந்த வகையிலான ஆடைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். பின்னலாடைகள் என்பது ஒரு இடத்தில் மட்டுமே தயார் செய்யப்படுவதில்லை.
பிரிண்டிங், தையல், சாயம் என்பது உள்பட பல்வேறு பணிகளுக்காக ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. இதில் சாயம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த ஆடைகளை பார்த்த உடனே வாங்கும் எண்ணத்தை தூண்டுவது பின்னலாடைகளின் கலர் ஆகும்.
இதற்காக பின்னலாடைகள் சாய ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு வருகின்றன. இந்த சாயமேற்றுவதற்கு ரசாயனம்(கெமிக்கல்) பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சிலர் இயற்கை முறையில் ஆடைகளுக்கு சாயமேற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சாயமேற்றப்படாத ஆடைகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் மவுசு அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து திருப்பூர் ஆடை விற்பனையாளர் கவுசல்யா தேவி கூறியதாவது:-
திருப்பூரில் கடுமையான வர்த்தக போட்டி நிலவி வந்து கொண்டிருகிறது. உள்நாடு போலவே வெளிநாடுகளிலும் இந்த போட்டி இருந்து வருகிறது. இதனால் ஆடை தயாரிப்பில் புதுமைகளை புகுத்தும் நிறுவனங்களே தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் ஆடைகள் தயாரிப்பில் புதுமைகளை புகுத்த முடிவு செய்தோம். ஆடைகளில் சாயமேற்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இது உடல் நலத்திற்கு கேடு என்பதால், சாயமேற்றாமல் ஆடைகளை தயாரிக்க முடிவு செய்தோம்.
அதன்படி பிறந்த குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கான உள்ளாடைகள் போன்றவற்றை உயர்தர காட்டன் துணிகளால் சாயமேற்றாமல் தயார் செய்கிறோம். இந்த ஆடைகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் மவுசு அதிகரித்து வருகிறது. அதிகளவு சாயமேற்றப்படாத ஆடைகள் அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இதுபோல் திருப்பூர் உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாயமேற்றப்படாமல் குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் ஆடைகள் விற்பனை அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் தற்போது சாப்பிடும் உணவு முறையிலும் இயற்கையான முறையை கடைபிடிக்க தொடங்கி வருகிறார்கள். இதுபோல் தாங்கள் அணியவும் இயற்கையாக தயாரிக்கப்படும் ஆடைகளையும் வாங்க தொடங்கியுள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.