குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லை அடுத்த நிலக்கோட்டை ஒன்றியம் மாலையகவுண்டன்பட்டி ஊராட்சி முருகத்தூரான்பட்டி ஏ.டி. காலனியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்கள் ஊரில் கடந்த ஓராண்டாக குடிநீர் வழங்கப்படவில்லை.
ஊரின் மையப்பகுதியில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக் கப்பட்டுள்ளன. ஆனால் அதில் தண்ணீர் இல்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதன் காரணமாக தற்போது தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எனவே எங்கள் பகுதியில் கூடுதலாக ஒரு ஆழ்துளை கிணற்றை அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மேல்நிலைத்தொட்டி அமைத்து அதில் தண்ணீரை சேமித்து வைத்து குழாய்கள் மூலம் எங்களுக்கு வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுமக்களில் சிலர் மட்டும் கலெக்டரை சந்தித்து தங்கள் பிரச்சினை குறித்து மனு அளிக்கும்படி போலீசார் தெரிவித்தனர். அதன்படி பொதுமக்களில் சிலர் குடிநீர் பிரச்சினை குறித்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அத்துடன் தங்கள் பகுதியில் மயான வசதி, சாக்கடை மற்றும் சமுதாய கூட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கலெக்டரிடம் அவர் கள் கோரிக்கை வைத்தனர்.