கிரீஷ் கர்னாட் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்: பல திறமைகளை கொண்டவர் என பிரதமர் மோடி புகழாரம்

எழுத்தாளர் கிரீஷ் கர்னாட் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் பல திறமைகளை கொண்டவர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2019-06-10 23:26 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தை சேர்ந்த எழுத்தாளர் கிரீஷ் கர்னாட் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “கிரீஷ் கர்னாட் பலதிறமைகள் கொண்டவர். அவரது திறமைகள் எப்போதும் நினைவு கூறப்படும். அவரது பணிகள் வரும் காலத்திலும் புகழ் பெற்றதாகவே இருக்கும். அவரது மறைவு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது“ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கன்னடத்திற்கு 7-வது ஞானபீட விருது பெற்று கொடுத்த பெருமை கிரீஷ் கர்னாட்டை சேரும். அவர் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு இந்த துக்கத்தை தாங்கும் சக்தியை இறைவன் வழங்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்“ என்று தெரிவித்துள்ளார்.

முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் கிரீஷ் கர்னாட் மூத்த இலக்கியவாதி. புராதன, இதிகாச கதைகளை அடிப்படையாக கொண்டு எழுதிய நாடகங்கள், இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பது அபூர்வமானது. அவரது கதைகள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கன்னடத்தின் கலாசாரம், பண்பாட்டை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமை அவருக்கு உண்டு. சினிமாத்துறையில் நடிகராகவும், இயக்குனராகவும் தனி முத்திரை பதித்தார். கர்நாடகத்தின் கலாசாரத்திற்கு புதிய வடிவம் கொடுத்த ஒரு திறமையாளரை நாம் இழந்துவிட்டோம் என்பது மிகுந்த துக்கத்தை ஏற்படுத்துகிறது. அவரது ஆன்மாவுக்கு அமைதி வழங்கட்டும் என்று இறைவனிடம் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.

பரமேஸ்வர்

கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் கூட்டப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அப்போது, கிரீஷ் கர்னாட் மரண செய்தி வந்ததை அடுத்து அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கிரீஷ் கர்னாட் கர்நாடகத்திற்கு 7-வது ஞானபீட விருதை பெற்றுக் கொடுத்தார். மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகளை வழங்கி அவரை கவுரவித்தது. அவர் மரணம் அடைந்தது, மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மிக சிறந்த எழுத்தாளரை இழந்துள்ள கன்னட இலக்கிய உலகம், ஏழ்மையாகிவிட்டது“ என்றார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னடத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர் கிரீஷ் கர்னாட், நாடக கலை நிபுணர், சிறந்த நாடக நடிகர், முற்போக்கு சிந்தனையாளர், ஞானபீட விருது பெற்றவர். அவரது மறைவு கர்நாடகத்தின் இலக்கியம், கலாசாரம், முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு மிகுந்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது“ என்று குறிப்பிட்டுள்ளார்.

எடியூரப்பா

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மாநிலத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர், சிறந்த நாடக ஆசிரியர், ஞானபீட விருது பெற்றவரான கிரீஷ் கர்னாட் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடகத்துறைக்கு அவர் அளித்த பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது. மேலும் திரைப்படங்களில் நடிகராக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். கன்னடர்களுக்கு ஒரு வழி காட்டியாக இருந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்“ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்