ரூ.33 ஆயிரம் கோடி செலவில் வன்காவ், கர்ஜத்தில் ரெயில்வே பணிமனை : அதிகாரி தகவல்
ரூ.33 ஆயிரம் கோடி செலவில் வன்காவ், கர்ஜத்தில் ரெயில்வே பணிமனை அமைக்கப்பட உள்ளதாக மும்பை ரெயில்வே விகாஸ் கழக அதிகாரி கூறினார்.
மும்பை,
மும்பையில் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் குர்லா, கல்வா மற்றும் சான்பாடாவில் ரெயில்வே பணிமனைகள் உள்ளன. இதேபோல மேற்கு ரெயில்வேயில் மும்பை சென்ட்ரல், காந்திவிலி, விரார் ஆகிய இடங்களில் ரெயில்வே பணிமனைகள் உள்ளன. தினமும் 250-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இங்கு பராமரிப்பு பணி மற்றும் சோதனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதுதவிர இரவு சேவை முடிந்து ரெயில்கள் இந்த பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இந்தநிலையில் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் உள்ள கர்ஜத், மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் வன்காவ் ஆகிய 2 இடங்களில் ரூ.33 ஆயிரம் கோடி செலவில் பணிமனைகள் அமைக்க மும்பை ரெயில்வே விகாஸ் கழகம் திட்டமிட்டுள்ளது.
மும்பை நகர போக்குவரத்து மேம்பாட்டு திட்டம்- 3ஏ-யின் (எம்.யு.டி.பி.3ஏ) கீழ் இந்த பணிமனைகள் அமைக்கப்பட உள்ளன.
இது குறித்து மும்பை ரெயில்வே விகாஸ் கழக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது:-
ரெயில்வே பணிமனை அமைக்க வன்காவ், கர்ஜத் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டி உள்ளது. இதில், அதிகளவில் தரிசு நிலமாகத்தான் உள்ளது. எனினும் இந்த திட்டத்துக்காக மத்திய ரெயில்வே, மேற்கு ரெயில்வேயின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.
புதிய ரெயில்வே பணிமனைகள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 65 ரெயில்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.