அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்று மத்தியக் குழுவினர் ஆய்வு
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்று மத்தியக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தினமும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில் உள் நோயாளிகளாக 100–க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனையின் தரம், சுகாதாரம், மற்றும் அடிப்படை வசதிகள், மருத்துவர்களின் அணுகுமுறை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று கிடைத்தது.
இதனால் இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்காக கூடுதல் மருத்துவர்கள், 298 படுக்கைகள், எக்ஸ்ரே, சிடி. ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா ஸ்கேன் போன்ற நவீன வசதிகள் ஏற்ப்படுத்தப்பட்டன. இதனால் இங்கு பிரசவத்திற்காக வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இந்த நிலையில் மத்திய அரசு மருத்துவம், கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு வசதிகளை கொண்ட 115 முன்னோடி மாவட்டங்களை தேர்ந்தெடுத்தது. இதில் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை முன்னோடி மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் தாலுகா அளவில் விருதுநகர் மாவடடம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையை தேர்ந்தெடுத்தனர்.
இதற்கான தேசிய தரச்சான்று வழங்க டெல்லி தேசிய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சாதனா சிங், மனோஜ்குமார் ஆகியோரைக் கொண்ட குழுவினர் வருகை தந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை முழுவதையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு தொடர்ந்து 3 நாட்கள் நடக்க உள்ளது.
அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, நோயாளிகள் வந்து செல்வதற்கான கட்டமைப்பு வசதிகள், பேட்டரி கார் ஆகியவற்றை பார்வையிட்டு மருத்துவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர். இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு தேசிய தரச்சான்று அளிக்கும் பட்சத்தில் மருத்துவமனையில் உள்ள படுக்கை ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு நிதிஉதவி வழங்கப்பட உள்ளதாகவும், மேலும் மருத்துவமனைக்கு கூடுதல் வசதிகள் கொண்ட சிகிச்சை முறைகளை பெற்று கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆய்வின் போது சுகாதார துறை இணை இயக்குனர் மனோகரன், துணை இயக்குனர்கள் செல்வராஜ், அமுதா மற்றும் மருத்துவர்கள் சந்திரமவுலி, அருணாச்சலம், காமாட்சிபாண்டியன், பாலசுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.