புதுச்சேரி மாநில முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன் மரணம்; அரசு மரியாதையுடன் இன்று உடல் அடக்கம்

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன் நேற்று மரணமடைந்தார். அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் இன்று நடக்கிறது.

Update: 2019-06-10 23:30 GMT
புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் 1996 முதல் 2000-ம் ஆண்டு வரை தி.மு.க.-த.மா.கா. கூட்டணி அரசில் முதல்-அமைச்சராக பதவி வகித்தவர் ஜானகிராமன் (வயது 78). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை மேலும் மோசமாகவே புதுவை காலாப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் மரணம் அடைந்தார்.

உடனடியாக அவரது உடல் புதுவை ஆம்பூர் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் உள்பட எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தி.மு.க. நிர்வாகிகள், தொழில் அதிபர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜானகிராமனின் உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவரது சொந்த ஊரான மரக்காணத்தை அடுத்த ஆலத்தூருக்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு காலை 10 மணிக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமனின் மறைவினையொட்டி புதுவை அரசு சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.

ஜானகிராமன் கடந்த 8.1.1941-ம் ஆண்டு திண்டி வனம் அருகே ஆலத்தூரில் பிறந்தார். இளவயதிலேயே தி.மு.க. வில் சேர்ந்தார். சென்னையில் தங்கியிருந்தபோது கருணாநிதி, முரசொலி மாறன் ஆகியோருக்கு டிரைவராகவும் பணியாற்றினார்.

அதன்பின் புதுவை வந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். கடந்த 1985-ம் ஆண்டு நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொடர்ந்து 1990, 1991, 1996, 2001 தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.

1990-ல் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் தலைமையிலான அமைச்சரவையில் பொதுப் பணித்துறை அமைச்சரானார். அரசு கொறடா, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார்.

1988-ல் தி.மு.க.வின் புதுவை மாநில பொருளாளராக நியமிக்கப்பட்டார். 1993-ம் ஆண்டு முதல் 2012 வரை ஒருங்கிணைந்த புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். அதன்பின் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

மறைந்த ஜானகிராமனுக்கு விஜயலட்சுமி, சாந்தாபாய் என்ற மனைவிகளும், அசோக்குமார், சந்திரேஷ் குமார், ஆறுமுகம் என்ற சரவணன் ஆகிய 3 மகன்களும், மதுபாலன், உத்ரகுமாரி அருண் என்ற மகள்களும் உள்ளனர். சுரேஷ்குமார், ரமேஷ் ஆகிய மகன்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர். உழவர்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவருமான எம்.என்.ஆர்.பாலன் இவரது மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்