போதமலைக்கு சாலைவசதி ஏற்படுத்தி தர வேண்டும் மலைவாழ்மக்கள் கலெக்டரிடம் மனு

போதமலைக்கு சாலைவசதி ஏற்படுத்தி தர வேண்டும், என்று மலைவாழ்மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2019-06-10 21:45 GMT
நாமக்கல், 

போதமலை மலைவாழ் மக்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :-

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட போதமலை, கீழுர் ஊராட்சி நடுக்காடு, நடுவளவு, தெற்குகாடு, மேலூர் மற்றும் கெடமலை பகுதிகளில் மலைவாழ் மக்கள் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் கரடு முரடான பாதைகளில் சுமார் 10 கி.மீட்டர் நடந்து சென்று தான் எந்த ஒரு சுமையாக இருந்தாலும், தலை சுமையாக எடுத்து சென்று, வாழ்க்கையை நடத்தி வருகிறோம்.

எங்களுடைய குழந்தைகள் படிப்பதற்கும், எங்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கவும் மற்றும் இதர பணிகள் அனைத்திற்கும் ராசிபுரம் நகரத்திற்கு தான் வரவேண்டும். கடந்த 2014-ம் ஆண்டு வடுகம் முதல் கீழூர் வழியாக மேலூர் வரையிலும், புதுப்பட்டி முதல் கெடமலை வரையிலும் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

தற்போது இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், போதமலைக்கு சாலை அமைக்க அடிக்கல் நாட்டாமல் நிலுவையில் இருந்து வருகிறது. வனத்துறைக்கு தேவையான நிதி அரசிடம் இருந்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே தமிழக அரசு உடனடியாக தேவையான நிதியை வனத்துறைக்கு செலுத்தி, தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகிற 24-ந் தேதி ராசிபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு ரே‌‌ஷன்கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் ஆதார்கார்டு ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்