கண்ணாடிகளை உடைத்து விவசாய நிலங்களில் வீசுவதால் பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவிற்பனை செய்ய வேண்டும்
விவசாய நிலங்களில் மதுபாட்டில்களை வீசிச்செல்வதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே, பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவிற்பனை செய்ய வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். மொத்தம் 473 மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் மனுக்களை கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில் தமிழகத்தில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான மதுக்கடைகள் அரசாங்கத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. மது கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. மது பிரியர்கள் திருவிழா, திருமணம் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் மதுவை பயன்படுத்துகிறார்கள்.
மது குடித்தபிறகு கண்ணாடியாலான பாட்டில்களை உடைத்து விவசாய நிலங்கள், கிணறு, குளங்கள், கழிவுநீர் கால்வாய் மற்றும் பொது இடங்களில் வீசிச்செல்கிறார்கள். இந்த பாட்டில்கள் மறுசுழற்சிக்கும் வருவதில்லை. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளின் முகத்திலும், உடைந்த கண்ணாடி பாட்டில்கள் குத்தி விடுகிறது. விவசாயிகள் விவசாய நிலங்களில் பயிர் செய்ய முடியவில்லை. கால்வாய்களை சுத்தம் செய்யும் போது கைகளில் குத்திவிடுகின்றன.
எனவே விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்கும் வகையில் மதுவை கண்ணாடி பாட்டிலில் அடைக்காமல் தண்ணீர் பாட்டிலை போன்று பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவை அடைத்து விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று பேரணாம்பட்டு தாலுகா கீழ்ஆலாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவிகள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் எங்கள் கிராமத்தில் 250 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு, குடியாத்தத்தில் இருந்து காலை 7.15, 7.45, 9.10, 11.50, பகல் 2.20, மாலை 5 மற்றும் 5.45 ஆகிய நேரங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது எங்கள் கிராமத்துக்கு அரசு பஸ்கள் சரியாக வருவதி்ல்லை.
காலை 7.15 மணிக்கு வந்த அரசு பஸ் வராததால், 7.45 மணிக்கு வரும் ஒரே பஸ்சில் 100-க்கணக்கான மாணவ- மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே 7.15 மணிக்கு இயக்கப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும். அதே போன்று அனைத்து பஸ்களையும் சீராக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
கூட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 19 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 87 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் ராமன் வழங்கினார்.
அப்போது சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் காமராஜ், ஆதிதிராவிடர் நல அலுவலர் வேணுசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.