டேங்கர் லாரிக்கு அடியில் தூங்கிய சிறுவன், சிறுமி உள்பட 3 பேர் உடல் நசுங்கி சாவு விக்ரோலியில் பரிதாபம்

விக்ரோலியில் டேங்கர் லாரிக்கு அடியில் தூங்கிய சிறுவன், சிறுமி உள்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-06-09 23:15 GMT
மும்பை,

மும்பை விக்ரோலி கைலாஷ் காம்ப்ளக்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் இரவு எண்ணெய் டேங்கர் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த டேங்கர் லாரியின் அடியில் நடைபாதையில் வசித்து வந்த லட்சுமி வாக்மரே (வயது50), சயாமா வாக்மரே (15) மற்றும் கணேஷ் வாக்மரே (3) ஆகிய மூன்று பேர் தூங்கி கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில், அங்கு இன்னொரு டேங்கர் லாரி வந்தது. அந்த டேங்கர் லாரியை டிரைவர் சாலையோரத்தில் நிறுத்த முயன்ற போது, திடீரென முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இதில், அந்த டேங்கர் லாரி நகன்றதில் அடியில் தூங்கி கொண்டிருந்த மூன்று பேரும் சக்கரத்தில் சிக்கி கொண்டனர். இதில் அவர்கள் 3 பேரும் உடல் நசுங்கி வேதனையில் அலறி துடித்தனர்.

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு லட்சுமி வாக்மரேயும், சிறுமி சயாமா வாக்மரேயும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுவன் கணேஷ் வாக்மரே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். இருப்பினும் அவனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற லாரி டிரைவரை பிடித்து கைது செய்தனர். மேலும் இதுகுறித்துஅவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். டேங்கர் லாரிக்கு அடியில் தூங்கிகொண்டிருந்த 3 பேர் உடல் நசுங்கி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்