சாம்ராஜ்நகர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பெண் உள்பட பெங்களூருவை சேர்ந்த 3 பேர் சாவு சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
சாம்ராஜ்நகர் அருகே, காவிரி ஆற்றில் மூழ்கி பெண் உள்பட பெங்களூருவை சேர்ந்த 3 பேர் இறந்தனர். சுற்றுலா சென்றவர்களுக்கு இந்த பரிதாபம் நேர்ந்து உள்ளது.
கொள்ளேகால்,
பெங்களூரு சுங்கதகட்டே பகுதியை சேர்ந்தவர்கள் மனோஜ்குமார்(வயது 30), குமார்(30), வீனா(25). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் நேற்று காலை இவர்கள் 3 பேரும் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றனர். அங்கு பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த இவர்கள் கொள்ளேகால் தாலுகா சிவனசமுத்திரா பகுதியில் ஓடும் பரசுக்கி நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அங்கு நீர்வீழ்ச்சியின் அழகை 3 பேரும் ரசித்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் ஓடும் காவிரி ஆற்றில் 3 பேரும் குளிக்க சென்றனர். இந்த சந்தர்ப்பத்தில் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற 3 பேரும் நீச்சல் தெரியாமல் தத்தளித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர். மேலும் சிலர் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் 3 பேரும் அதற்குள் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டனர்.
இதுபற்றி அறிந்த கொள்ளேகால் புறநகர் போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் மூழ்கிய 3 பேரின் உடல்களையும் மீட்டனர். மேலும் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் 3 பேரின் குடும்பத்தினருக்கும் போலீசார் தகவல் கொடுத்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கொள்ளேகால் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆற்றில் மூழ்கி பெண் உள்பட 3 பேர் இறந்த சம்பவம் கொள்ளேகாலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.