ஏரல் அருகே பறவைகள் மீது பரிவு காட்டும் இளைஞர்கள் மரங்கள் தோறும் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி வைக்கின்றனர்

ஏரல் அருகே பறவைகள் மீது இளைஞர்கள் பரிவு காட்டி வருகிறார்கள். மரங்கள் தோறும் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி வைக்கின்றனர்.

Update: 2019-06-09 22:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள மேலமங்கலகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்துராஜ். என்ஜினீயரிங் படித்து வரும் இவர் கோடை வெயிலில் தவிக்கும் பறவைகள், விலங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இந்த பணிக்காக அந்த பகுதி சிறுவர்கள், இளைஞர்களை ஒருங்கிணைத்து உள்ளார். அந்த பகுதியை சேர்ந்த 8 பேர் இணைந்தனர். அவர்கள் தேவையில்லாத காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்தனர். அந்த பாட்டில்களை தண்ணீர் ஊற்றி வைக்கும் பாத்திரமாக மாற்றினர். அந்த பகுதிகளில் உள்ள மரங்களில் பாட்டில்களை கட்டி வைத்து தண்ணீரை ஊற்றத் தொடங்கினர்.

இதுபோன்ற அந்த பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மரங்களில் பாட்டில்களை கட்டி வைத்து தண்ணீர் ஊற்றி உள்ளனர். இந்த தண்ணீரை குருவிகள், காக்கைகள் உள்ளிட்ட பறவைகள் குடித்து செல்கின்றன. தினந்தோறும் இளைஞர்கள் மரங்களில் உள்ள பாட்டில்களில் தண்ணீர் ஊற்றி பறவைகள் மீது பரிவு காட்டி வருகின்றனர். இதுகுறித்து வீரமுத்துராஜ் கூறும் போது, கோடை காலத்தில் விலங்குகள், பறவைகள் தண்ணீருக்காக அலைந்து திரியும் நிலையை பார்த்தேன். இதனால் அந்த உயிரினங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதற்காக எங்கள் ஊர் இளைஞர்களுடன் சேர்ந்து மரங்களில் பழைய காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் தண்ணீர் வைக்கத் தொடங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது. ஏராளமான பறவைகள், அணில்கள் தண்ணீரை குடித்து செல்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு எங்கள் வீட்டிலும் ஒத்துழைப்பு தருகின்றனர்.

இதேபோன்று அனைவரும் முடிந்த அளவுக்கு பறவைகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்