வேலூர் பழைய பஸ்நிலையத்தில் ஓட்டலில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
வேலூர் பழைய பஸ்நிலையத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதனால் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர்.
வேலூர்,
வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் தாமோதரன். இவர் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். வழக்கம்போல நேற்று காலையில் ஓட்டல் திறக்கப்பட்டு ஊழியர்கள் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சிலர் சாப்பிட வந்திருந்தனர்.
இந்த நிலையில் சமையல்செய்த இடத்தில் பயன்படுத்திய கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. இதனால் ஊழியர்கள் அலறியடித்து ஓடத்தொடங்கினர். அவர்களை பார்த்து அங்கு சாப்பிட வந்திருந்தவர்களும் ஓட்டம் பிடித்தனர்.
சிறிது நேரத்தில் சிலிண்டர் முழுவதும் எரிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ஓட்டல் முழுவதும் தீப்பிடித்துகொண்டது. உடனடியாக இதுபற்றி வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீைர பீய்ச்சியடித்து போராடி தீயை அணைத்தனர். அதற்குள் ஓட்டலில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. மேலும் ஓட்டலில் இருந்த மற்ற சிலிண்டர்களை உடனடியாக வெளியே எடுத்துவந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து வேலூர் வடக்குபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.