இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்; 100 பேருக்கு அரசு மானியமாக ரூ.60 லட்சம் ஒதுக்கீடு, கலெக்டர் தகவல்

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 100 பேருக்கு வழங்க அரசு மானியமாக ரூ.60லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.

Update: 2019-06-08 23:00 GMT

சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையும் நோக்கத்தில் தமிழக அரசால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு தற்போது மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1.லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், வங்கி கடன் உதவியும், திட்ட மதிப்பில் 25சதவீதமும், அதிக பட்சம் ரூ.1 லட்சத்து 25ஆயிரம் வரை அரசு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் இந்த நிதியாண்டிற்கு 100 பேர்க்கு அரசு மானியமாக ரூ. 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயன் பெறவிரும்புபவர்கள் குறைந்தபட்சம் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொதுப்பிரிவு ஆண்கள் 18 வயது முதல் 35 வயது வரையும், சிறப்பு பிரிவினர்களான ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கை மற்றும் மாற்றுத்திறனாளிகள் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1½லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் இது குறித்த விவரங்களை மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரில் அணுகி தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்