காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர விருப்பம் மந்திரி கிரிஷ் மகாஜன் தகவல்

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர விருப்பம் தெரிவித்து இருப்பதாக மந்திரி கிரிஷ் மகாஜன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-06-08 22:01 GMT
மும்பை,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த ராதாகிருஷ்ண விகேபாட்டீல் மகன் சுஜய் விகேபாட்டீல் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதாவில் இணைந்தார். அவர் பா.ஜனதா சார்பில் அகமது நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராதாகிருஷ்ண விகே பாட்டீல், எம்.எல்.ஏ. பதவியில் இருந்தும் விலகினார். வரும் 17-ந் தேதி தொடங்க உள்ள சட்டசபை மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு அவர் பா.ஜனதாவில் இணையப்போவதாகவும், அவருக்கு மந்திரி பதவி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

ராதாகிருஷ்ண விகே பாட்டீலுடன் அவரது ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவில் இணைவதாக கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தல் வருகிற செப்டம்பர்- அக்டோபர் மாத வாக்கில் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் ஆளும் பா.ஜனதாவில் சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அசோக் சவான் குற்றச்சாட்டு

இந்த நிலையில் மராட்டிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் நேற்று முன்தினம் கட்சி கூட்டத்தில் பேசியபோது, “முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எங்கள் கட்சியை சேர்ந்தவர்களை பா.ஜனதாவில் வந்து சேருமாறு நேரடியாக அழைக்கிறார். முதல்-மந்திரி காங்கிரசை உடைக்க கடுமையாக முயற்சி செய்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நெருக்கமானவராக கருதப்படும், நீர்வளத்துறை மந்திரி கிரிஷ் மகாஜன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

25 எம்.எல்.ஏ.க்கள்

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுமார் 25 எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். இதில் சிலர் என்னை நேரில் சந்தித்தனர். மேலும் பலர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசுகின்றனர். அவர்கள் பா.ஜனதா கட்சியில் சேர ஆர்வமாக உள்ளதாக என்னிடம் தெரிவித்தனர்.

மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், தன்னை சுற்றி உள்ளவர்கள் எந்த நேரத்திலும் கட்சி தாவுவார்கள் என்பதை பற்றி அறியாமல் உள்ளார். அரசியல் சூழ்நிலை தற்போது பா.ஜனதாவுக்கு சாதகமாக உள்ளது.

நிபந்தனைகள் இன்றி...

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேரடியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தொடர்புகொண்டு கட்சியில் இணைந்துகொள்ள கூறுவதாக அசோக் சாவன் வைத்த குற்றச்சாட்டை மறுக்கிறேன். எந்த நிபந்தனையின்றி இணைபவர்களுக்கு மட்டுமே கட்சியில் இடம் அளிப்பது என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது. ஏற்கனவே கட்சியில் இணைந்தவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. பா.ஜனதா ஒருபோதும் பொய் வாக்குறுதிகளை அளிப்பதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்