பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.16 லட்சம் கொள்ளை டீக்கடை உரிமையாளர் உள்பட 6 பேர் கைது
பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த டீக்கடை உரிமையாளர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பர்நாத்,
தானே மாவட்டம் கல்யாண் கிழக்கு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பிரதிப் சிங் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த மாதம் 31-ந்தேதி முர்பாட் சாலையில் உள்ள வங்கிக்கு பணத்தை செலுத்த மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை ஒரு கும்பல் பின்தொடர்ந்து வந்ததது. திடீரென அந்த கும்பலினர் பிரதிப் சிங்கை வழிமறித்து தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.16 லட்சத்து 40 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பிரதிப் சிங், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மகாத்மா புலே போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
6 பேர் கைது
அப்போது அதில் பதிவாகியிருந்த காட்சியை வைத்து கொள்ளையர்களில் ஒருவரான ருபேஷ் மாத்ரே (வயது27) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில், கூட்டாளிகளான சச்சின் சிரோட்கர் (23), நித்தின் பவார் (38), சோம்நாத் (20), ரோகிதாஸ் (25) மற்றும் இதற்கு திட்டம் போட்டு கொடுத்த டீக்கடை உரிமையாளர் வைபவ் (21) ஆகிய 5 பேர் சிக்கினர். இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.