நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து விட்டது - மத்திய அரசு மீது ஆ.ராசா குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து விட்டது என்று ஊட்டியில் நடந்த நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் மத்திய அரசு மீது ஆ.ராசா குற்றம் சாட்டி பேசினார்.

Update: 2019-06-08 23:30 GMT
ஊட்டி,

ஊட்டி நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா பேசியதாவது:-

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 3 முறை போட்டியிட்டு உள்ளேன். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறேன். இந்த தொகுதி தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கேரளா மாநிலத்தையொட்டி உள்ள சேரம்பாடி பகுதி வரை உள்ளது. வாக்களித்து பெற்றி பெற செய்த பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது வெற்றியை அதிகார பலத்தாலும், பணம் கொடுத்தும் தடுக்க முயன்றவர்கள் சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். தமிழகத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இரட்டை தலைமையை ஏற்க முடியாது என்று உள்கட்சி பிரச்சினையை தொடங்கி உள்ளனர்.

இன்னும் 2 மாதத்தில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமையும். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன், விவசாய கடன், கல்விக்கடன் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தி.மு.க.வுக்கு பாரம்பரிய வரலாறு உள்ளது. ஆரம்ப காலத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்சாவை ஒழித்து, சைக்கிள் ரிக்சா வழங்கினார். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தார். இதுபோன்ற வரலாறு தி.மு.க.வுக்கு இருக்கிறது.

அவரின் வழியில் வந்த மு.க.ஸ்டாலின் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கண்டு உள்ளார். அவர் அறிவித்தது போல காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மற்ற மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அறிவித்து இருந்தால், மோடி பிரதமராக ஆகியிருக்க முடியாது.

மன்மோகன்சிங் ஆட்சியில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருந்தது. தற்போது பா.ஜனதா ஆட்சியில் 6 சதவீதமாக குறைந்து விட்டது. நாடு முழுவதும் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் அரசியல் சட்டம் 110 முறை திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் அதன் அடிப்படை பண்புகளை திருத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது. எனவே அனைத்து சமுதாய மக்களும் ஜாதி, மத வேறுபாடு இன்றி ஒன்றிணைந்து வாழ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்