ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை வழக்கில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 4 பேர் கைது
ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை வழக்கில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே உள்ள வடகுச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் இளவரசன் மகன் தினேஷ்குமார் (வயது 24), தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர். கடந்த 6–ந் தேதி இரவு தினேஷ்குமார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வரும் முண்டியம்பாக்கம் காலனியை சேர்ந்த முருகையன் (49) என்பவரிடம் சென்று சிகரெட் வாங்கிக்கொண்டு ரூ.500 கொடுத்துள்ளார். அதற்கு முருகையன் சில்லறை இல்லை என்று கூறினார்.
இதனால் அவர்கள் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ்குமார், முருகையனை தாக்கினார். இதை தடுக்க வந்த முருகையனின் மனைவி செண்பகவள்ளி, மகன் அகிலன் ஆகியோரையும் தினேஷ்குமார் தாக்கினார். இதையறிந்ததும் முருகையனின் மூத்த மகனான தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வரும் ஆகாஷ் (21) தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்கு வந்து தினேஷ்குமாரை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த தினேஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தினேஷ்குமார் இறந்தார்.
இதுகுறித்து இளவரசன், விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அந்த புகாரில் தனது மகன் தினேஷ்குமாரை முருகையன், அவரது மகன் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கியதாக கூறியிருந்தார். அதன்பேரில் முருகையன், ஆகாஷ் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் முருகையன், ஆகாஷ், கலையரசன் (35), பார்த்திபன் (32) ஆகிய 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.