குன்றத்தூர் அருகே வேன் மீது மொபட் மோதல்; தந்தை-மகள் பலி

குன்றத்தூர் அருகே நின்று கொண்டிருந்த வேன் மீது மொபட் மோதிய விபத்தில் தந்தை, மகள் பலியானார்கள்.

Update: 2019-06-08 20:09 GMT
பூந்தமல்லி,

குன்றத்தூரை அடுத்த தண்டலம் மணிமேடு, அம்பாள் நகரை சேர்ந்தவர் விஜய் (வயது 36). பிளம்பராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மலர். இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் செஞ்சியில் நடைபெற்ற திருமண விழாவுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மலர் 2 மகள்களுடன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார்

விஜய் தனது மொபட்டில் மகள் நிவேதா (8) வை முன்னால் நிற்க வைத்து கொண்டு, மகன்கள் ரஞ்சித் (14), வெங்கடேசன்(11) ஆகியோரை பின்னால் அமர வைத்து மொபட்டை ஓட்டி வந்தார். வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை, திருமுடிவாக்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த வேன் மீது நிலைதடுமாறி மொபட் மோதியது.

தந்தை, மகள் பலி

இதில் நிவேதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். விஜய் காயம் அடைந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிவேதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயம் அடைந்த விஜய் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்து போனார். ரஞ்சித், வெங்கடேசன் ஆகியோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்