திருச்சி ஜங்ஷனில் ரெயில் என்ஜின் தடம்புரண்டது ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் தாமதம்

திருச்சி ஜங்ஷனில் ரெயில் என்ஜின் தடம்புரண்டதால் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் தாமதமானது.

Update: 2019-06-08 23:15 GMT
திருச்சி,

கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கோவையில் இருந்து திருச்சி வரை மின்சார என்ஜினில் இயக்கப்படுகிறது. பின்னர் மின்சார என்ஜினை மாற்றிவிட்டு டீசல் என்ஜின் பொருத்தி இயக்கப்படும். இந்நிலையில் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 10.55 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடைக்கு வந்தது.

இதையடுத்து ரெயிலில் டீசல் என்ஜின் பொருத்துவதற்காக ஜங்ஷன் யார்டில் இருந்து ஒரு என்ஜின் புறப்பட்டு 4-வது நடைமேடை வழியாக 3-வது நடைமேடை பாயிண்ட் பகுதியை கடந்து முதலாவது நடைமேடை நோக்கி சென்றது. அப்போது ரெயில் என்ஜின் முன்பகுதியில் இடது பக்கம் 2 சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தை விட்டு இறங்கி தடம்புரண்டன. இதனால் பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதையடுத்து என்ஜின் டிரைவர் உடனடியாக சுதாரித்து என்ஜினை நிறுத்தினார்.

என்ஜின் தண்டவாளத்தை விட்டு இறங்கியது குறித்து ரெயில் நிலைய அதிகாரிக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் என்ஜின் டிரைவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். மேலும் அந்த தண்டவாள பாதையில் ரெயில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தண்டவாளத்தில் தடம்புரண்ட சக்கரங்களை தூக்கி நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக தூக்கி நிறுத்த முடியாத காரணத்தால் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வேறொரு என்ஜின் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பின்னர் மற்றொரு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக பகல் 12.20 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றது.

இதற்கிடையில் மீட்பு பணி மற்றொருபுறம் நடந்து வந்தது. ரெயில் விபத்து மீட்பு வேகன் வரவழைக்கப்பட்டு பணிகள் நடந்தன. நவீன ஜாக்கி மூலம் ரெயில் என்ஜினை தூக்கி, தடம்புரண்ட சக்கரங்களை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஊழியர்கள் போராடி தடம்புரண்ட சக்கரங்களை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தி வைத்தனர்.

அதன்பின்னர் பகல் 2 மணி அளவில் ரெயில் என்ஜின் அந்த இடத்தில் இருந்து இயக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 3 மற்றும் 4-வது நடைமேடையில் இருந்து இயக்கப்பட வேண்டிய ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. அந்த நடைமேடைகளில் ரெயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

என்ஜின் தடம்புரண்டதற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில்வே தண்டவாள பாயிண்டில் கோளாறு காரணமா? அல்லது என்ஜின் டிைரவர் கவனக்குறைவு காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது. தடம்புரண்டிருந்த என்ஜினை பயணிகள் பலர் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்