மைசூருவில் 1½ ஏக்கரில் பரந்துவிரிந்துள்ளது காய்ந்துபோன 300 ஆண்டு வயதான ஆலமரம் துளிர்விட்டது பச்சை குடை போல் காட்சி அளிக்கிறது

மைசூருவில் 1½ ஏக்கரில் பரந்துவிரிந்துள்ள 300 ஆண்டு வயதான ஆலமரம் காய்ந்துபோய் கிடந்தது. தற்போது பெய்து வரும் மழையால் அந்த மரம் மீண்டும் துளிர்விட்டு பச்சை குடை போல் காட்சி அளிக்கிறது.

Update: 2019-06-08 23:00 GMT
மைசூரு,

அரண்மனைநகரம் என அழைக்கப்படும் மைசூரு அருகே வருணா சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆலனஹள்ளி கிராமத்தில் டி.நரசிப்புரா ரோட்டில் பெரிய ஆலமரம் (தொட்ட ஆலதமரா) உள்ளது. இது மைசூருவில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மரத்துக்கு 300 ஆண்டு வயது இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலமரம் கிளைகள் விட்டு சுமார் 1½ ஏக்கரில் பரந்து விரிந்து காட்சி அளிக்கிறது. இந்த மரத்தை மைசூரு மாவட்ட மக்கள் பாரம்பரியமிக்க மரம் என்று பெயர் சூட்டி அழைத்து வருகிறார்கள்.

இந்த மரம் அமைந்துள்ள பகுதியில் கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் நடந்துள்ளது. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தின் பாபா, படையப்பா ஆகிய படங்களும், இந்தி நடிகர் அமீர்கானின் ராஜா இந்துஸ்தானி படமும், கன்னட நடிகர் விஷ்ணுவர்தனின் ஆப்த ரக்‌ஷா படத்தின் படப்பிடிப்பும் இங்கு நடத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த மரம் திரைப்பட படப்பிடிப்புக்கு பெயர் பெற்று விளங்குகிறது. மேலும் சிறந்த சுற்றுலா தலமாகவும் இவ்விடம் திகழ்கிறது.

தொடர் மழையால் துளிர்விட்டது

இதற்கிடையே கர்நாடகத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. இதனால் இந்த பெரிய ஆலமரமும் காய்ந்துபோய் காணப்பட்டது. இதனால் கோடை காலத்தில் அந்த மரத்தின் நிழலில் ஓய்வெடுக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில் மைசூரு மாவட்டத்தில் கடந்த சில வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் தற்போது அந்த பெரிய ஆலமரத்தின் கிளைகள் துளிர்விட்டு பசுமை போர்த்தி காட்சி அளிக்கிறது. தற்போது இந்த மரம் பசுமை குடை போர்த்தியது போல் அழகுற காண்போரின் கண்ணுக்கு விருந்தளிக்கிறது.

சுற்றுலா தலமாக அறிவிக்க...

இதனால் தற்போது அந்த மரத்தை பார்க்கவும், அதன் நிழலில் ஓடி விளையாடவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 2 மாதங்களாக காய்ந்து கிடந்த மரம் தற்போது பச்சை பசேல் என காட்சி தருவது கண்கொள்ளா காட்சியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் உற்சாகம் பொங்க கூறினர்.

மேலும் இந்த ஆலமரம் 300 ஆண்டு பழமையானது. எனவே இந்த இடத்தை சுற்றுலாதலமாக அறிவிக்க மைசூரு மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்