கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் - போக்குவரத்து பாதிப்பு

குளு, குளு சீசன் முடிவடையும் நிலையில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் வந்த வாகனங்கள் நெரிசலில் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-06-08 23:15 GMT
கொடைக்கானல்,

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிறைவடையும் நிலையில் உள்ளது. அத்துடன் ரம்ஜான் பண்டிகை மற்றும் வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிகாலை முதலே சுமார் 7 ஆயிரத்துக்கு அதிகமான சுற்றுலா வாகனங்கள் கொடைக்கானலுக்கு வந்தன.

குறிப்பாக கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநில வாகனங்களே அதிக அளவில் கொடைக்கானலுக்கு வந்தன. இதன் காரணமாக நகரின் முக்கிய சுற்றுலா இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக பெருமாள்மலை முதல் அப்சர்வேட்டரி வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவலறிந்த போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். இருப்பினும் பல பகுதிகளில் பல மணி நேரம் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக் கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததன் காரணமாக நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன. பலர் விடுதிகளில் அறை கிடைக்காமல் ஏரிச்சாலையில் வாகனங்களை நிறுத்தி அதிலேயே தங்கினர்.

காலையில் வெயிலின் தாக்கம் இருந்தாலும் பகல் 12 மணிக்கு மேல் வானில் மேக கூட்டங்கள் திரண்டன. அதைத்தொடர்ந்து அங்கு ரம்யமான சூழலும் ஏற்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தும், நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் பொழுதை கழித்தனர்.

மேலும் செய்திகள்