ஏரியில் சாயப்பட்டறை கழிவுகளை கொட்ட எதிர்ப்பு: ‘செப்டிக் டேங்க்’ வண்டிைய விடிய, விடிய சிறைபிடித்த கிராம மக்கள்
தீவட்டிப்பட்டி அருகே ஏரியில் சாயப்பட்டறை கழிவுகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து செப்டிக் டேங்க் வண்டியை கிராம மக்கள் விடிய, விடிய சிறைபிடித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வராததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.
ஓமலூர்,
சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூரை அடுத்து தளவாய்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தளவாய்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து நின்று கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.
இதனால் ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. மேலும் ஏரியில் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர். அருகில் வனப்பகுதி உள்ளதால் குரங்கு, மான், முயல் போன்றவைகள் நடமாட்டமும் இந்த ஏரியில் காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுகாலமாக நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் செப்டிக் டேங்க் கழிவுகள் மற்றும் சாயப்பட்டறை கழிவுகளை டிராக்டர் மற்றும் சரக்கு வேன் போன்ற செப்டிக் டேங்க் வண்டிகளில் கொண்டு வந்து கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் நாளடைவில் ஏரியில் துர்நாற்றம் வீச தொடங்கியது.
இதுபற்றி கடந்த 6 மாதத்திற்கு முன்பு தீவட்டிப்பட்டி போலீசில் தளவாய்பட்டி பகுதி மக்கள் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மற்றும் குரங்குகள் குட்டையில் கொட்டி விடப்பட்ட சாயக்கழிவு மற்றும் செப்டிக் டேங்க் கழிவு நீரை குடித்ததால் செத்து விட்டன.
இதையறிந்த அப்பகுதி வாலிபர்கள் இரவு நேரங்களில் செப்டிக் டேங்க் கழிவு மற்றும் சாயப்பட்டறை கழிவுகளை கொண்டு வரும் வண்டிைய சிறைபிடிக்க இரவு முழுவதும் விழித்திருந்து சமீபகாலமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் செப்டிக் டேங்க் வாகனம் ஒன்று தளவாய்பட்டி ஏரிக்கு வந்தது. இந்த வண்டியை மடக்கி பிடித்த இளைஞர்கள் டேங்கினை திறந்து பார்த்தபோது சாயப்பட்டறை கழிவுகள் இருப்பதும், அது துர்நாற்றம் வீசுவதும் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த வண்டியை சிறைபிடித்தனர்.
வண்டியை ஓட்டி வந்தவரிடம் விசாரித்ததில் தர்மபுரியை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செப்டிக் டேங்க் வண்டியின் டயர்களை பஞ்சராக்கினர்.
மேலும் அந்த வண்டியை எடுத்து செல்லாமல் இருக்க வண்டியை சுற்றி நின்றிருந்தனர். பின்னர் நேற்று காலை 8 மணி ஆகியும், போலீசார் சம்பவ இடத்திற்கு வராததால் ஆத்திரம் அடைந்த அந்த கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலைக்கு திரண்டு வந்து சாலைமறியலில் ஈடு்பட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த தீவட்டிப்பட்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிகாரிகளிடம் சரமாரியாக குற்றம்சாட்டி பேசினர்.
குறிப்பாக தொடர்ந்து இந்த ஏரியில் சாயப்பட்டறை கழிவுகளை கொட்டி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனால் ஆடு, மாடுகள் செத்து வருகிறது. செப்டிக் டேங்க் கழிகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதனிடையே காடையாம்பட்டி தாசில்தார் மகேஷ்வரி, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மோகன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அந்த வண்டியில் கொண்டு வரப்பட்ட கழிவுகளை ஆய்வு செய்தனர். அது சாயப்பட்டறை கழிவு என தெரிய வந்தது. இதனையடுத்து செப்டிக் டேங்க் வண்டி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் செம்மாண்டப்பட்டி, மூக்கனூர் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இ்ந்த போராட்டத்தையொட்டி அந்த சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொதுமக்களின் இந்த போராட்டத்தை அடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த 3 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கவும், மின் இணைப்பை துண்டிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சுமார் 15 மணி நேரம் செப்டிக் டேங்க் வண்டியை சிறைபிடித்ததுடன், 3 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்திலும் கிராம மக்கள் ஈடுபட்டது ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.