மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைக்கு பதிவு செய்ய சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைக்கு பதிவு செய்ய சிறப்பு முகாம் நடக்கிறது.
தேனி,
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் யு.டி.ஐ.டி. என்ற தனித்துவமான எண்ணுடன் கூடிய அடையாள அட்டை பெற வேண்டியது அவசியமாகும். எனவே, இந்த அடையாள அட்டைக்கு பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் அளவில் இந்த முகாம் நடக்கிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் முகாம் நடக்கிறது. கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே முகாம் நடக்கிறது.
அதன்படி ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு வருகிற 18-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை முகாம் நடக்கிறது. கம்பம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு வருகிற 29-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (ஜூலை) 2-ந்தேதி வரையும், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு ஜூலை 3-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையும் சிறப்பு முகாம் நடக்கிறது.
சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு ஜூலை 10-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையும், போடி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு ஜூலை 23-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரையும் தேனி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு ஜூலை 30-ந்தேதி முதல் ஆகஸ்டு 3-ந்தேதி வரையும் சிறப்பு முகாம் நடக்கிறது.
இச்சிறப்பு முகாமிற்கு மாற்றுத்திறனாளிகள் வர தேவையில்லை. அதற்கு பதிலாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் வரலாம். இதற்கு மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வெள்ளைத்தாளில் மாற்றுத்திறனாளியின் கையொப்பம் அல்லது இடதுகை பெருவிரல் ரேகை, ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், சாதி சான்றிதழ் நகல் ஆகியவற்றை சிறப்பு முகாமில் ஒப்படைக்கலாம். அல்லது இந்த சான்றுகளை தேனியில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் ஒப்படைக்கலாம்.
இந்த தகவலை தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.