மும்பையில் 16-ந் தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு தனியார் வானிலை ஆய்வு மையம் தகவல்

மும்பையில் வருகிற 16-ந் தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2019-06-07 23:15 GMT
மும்பை,

மராட்டியத்தில் பல மாவட்டங்கள் வறட்சியின் கோர பிடியில் சிக்கி தவிக்கின்றன. மக்கள் குடிநீருக்கே பரிதவித்து வருகின்றனர்.

மாநில தலைநகர் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. மழைக்காலம் வரையிலும் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு குடிநீர் வெட்டு அமலில் உள்ளது. எனவே குடிநீர் தேவைக்காக மும்பைவாசிகள் பருவமழையை தான் பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் மராட்டியத்தில் பருவமழைக்காலம் ஆகும்.

16-ந் தேதி

இந்த நிலையில், மாநிலத்தில் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கும் என்றும், வழக்கத்தை விட குறைவாகவே மழை பெய்யும் என்றும் ஏற்கனவே ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மும்பையில் வழக்கமாக பருவமழை ஜூன் 8 அல்லது 10-ந் தேதியில் தொடங்கும்.

ஆனால் இந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதிக்கு பிறகு தான் தொடங்க வாய்ப்பு உள்ளதாக ஸ்கைமெட் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில், மும்பையில் வருகிற 16-ந் தேதியில் இருந்து 18-ந் தேதிக்குள் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தற்போது அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்