நாகை மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டதால் தண்ணீர் தேடி அலையும் கால்நடைகள்

நாகை மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டதால் கால்நடைகள் தண்ணீர் தேடி அலைகின்றன.

Update: 2019-06-07 22:30 GMT

நாகப்பட்டினம்,

டெல்டா மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதால் நாகை மாவட்டத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாட்டால் மனிதர்கள் மட்டுமன்றி மாடுகள், ஆடுகள், குதிரைகள் உள்ளிட்ட 10 லட்சம் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 7 ஆண்டுகளாக டெல்டாவின் கடைமடை மாவட்டமான நாகையில் உள்ள ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் வறண்டு காணப்படுகிறது. கோடை மழையும் கைவிட்டதால் தங்களது கால்நடைகளை வளர்க்க முடியாமல் கால்நடை வளர்ப்போர் தவித்து வருகின்றனர்.

தற்போது நாளுக்கு நாள் வெளுத்தும் வாங்கும் வெயிலால், மேய்ச்சலுக்கு செல்லும் மாடு, ஆடுகள் தண்ணீருக்காக குளத்திலும், குட்டையிலும் தேங்கி கிடக்கும் கழிவுநீரை குடித்து உயிர் வாழக்கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் கூறியதாவது:– கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி என நாகை மாவட்டம் முழுவதும் 9 லட்சத்து 83 ஆயிரத்து 547 கால்நடைகள், நீர்நிலைகள் வறண்டு போனதால் தண்ணீருக்காக அலைந்து வருகின்றன. அதுமட்டுமின்றி கோடை வெயிலின் தாக்கத்தால், கால்நடைகளுக்கு எடை குறைவு ஏற்படுகிறது. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை பாதுகாக்க டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை விலை கொடுத்தும், குளம், குட்டைகளில் தேங்கி கிடைக்கும் நீரை கால்நடைகளுக்கு கொடுத்து வருகிறோம். தண்ணீரின்றி கால்நடைகள் உயிரிழக்கும் அபாய நிலை உள்ளது. எனவே, கால்நடைகளை பாதுகாக்க நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சம்பந்தப்பட்ட துறையினர் தண்ணீர் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்