ஆதிதிராவிடர் நலத்துறை பழங்குடியினர் நலத்துறையாக பெயர் மாற்றம் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
ஆதிதிராவிடர் நலத்துறையை, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையாக பெயர் மாற்றம் செய்வது என அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபையில் உள்ள முதல்-அமைச்சர் கேபினெட் அறையில் அமைச்சரவை கூட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் புதுவை அரசு தலைமை செயலாளர் அஸ்வனி குமார், அரசு செயலாளர் அன்பரசு, கலெக்டர் அருண் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இலவச அரிசி
கூட்டம் முடிந்தவுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* கூட்டத்தில் கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
* புதுச்சேரி அரசு ஆதி திராவிடர் நலத்துறையை, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையாக பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
* புதுவை அரசு சார்பில் இலவச அரிசி திட்டத்தை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
* சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
* லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள சர்க்கரை ஆலையை பொதுமுறையில் டெண்டர் வழங்குதல். மேலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை கொடுப்பது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தல். மீண்டும் மில்லை இயக்குதல் உள்ளிட்ட கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘நிபா’ வைரஸ்
மேலும் அவர் கூறுகையில், ‘புதுச்சேரி மாநிலம் மாகி பகுதியில் ‘நிபா’ வைரஸ் தாக்கம் இருப்பதால் சுகாதாரத்துறை இயக்குனரை தொடர்பு கொண்டு தனி வார்டு அமைக்க உத்தரவிட்டுள்ளேன். அதேபோல் முன்னெச்சரிக்கையாக தேவையான மருத்துகளும், தயார் நிலையில் டாக்டர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்றார்.