மகளை பராமரிப்பது தொடர்பான வழக்கு: நடிகை வனிதா விஜயகுமார் கோர்ட்டில் ஆஜர்
மகளை பராமரிப்பது தொடர்பான வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.
திருவள்ளூர்,
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் ஐதராபாத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வசித்து வருகின்றனர்.
ஆனந்தராஜ் மகளை தன்னுடன் ஐதராபாத்திற்கு அழைத்து சென்று வளர்த்து வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு வனிதா விஜயகுமார் ஐதராபாத் சென்று தன்னுடைய மகளை தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார்.
கோர்ட்டில் ஆஜர்
இதை அறிந்த ஆனந்தராஜ் தன்னுடைய மகளை வனிதா விஜயகுமார் கடத்தி சென்று விட்டதாக ஐதராபாத் போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து வனிதா விஜயகுமார் திருவள்ளூர் கோர்ட்டில் தன்னுடைய மகளுக்கு தான்தான் பாதுகாப்பு அளிப்பதாக கூறி தன் கணவரிடம் குழந்தையை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று இந்த வழக்கு விசாரணைக்காக நடிகை வனிதா விஜயகுமார் திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் ஆஜர் ஆனார்.
வழக்கை மாவட்ட நீதிபதி செல்வநாதன் விசாரித்தார். விசாரணைக்காக அவரது கணவர் வராததால் தீர்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை. பின்னர் வெளியே வந்த வனிதா விஜயகுமார் நிருபர்களிடம் கூறுகையில், என்னுடைய மகளை நானே என் முழு பராமரிப்பில் வைத்து கொள்ளவேண்டும் என கோர்ட்டில் முறையிட்டேன். நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.