சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் வெளிநடப்பு

சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2019-06-07 20:56 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாபாளையம் கிராமத்தில் உள்ள அரசினர் தொடக்கப்பள்ளியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் தணிக்கை அதிகாரி விநாயகம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

புறக்கணிப்பு

இதில் பங்கேற்ற பெண்கள் நூறு நாள் வேலையை முழுமையாக அனைத்து நாட்களுக்கும் வழங்குவது இல்லை. அப்படியே வழங்கினாலும் அதற்குரிய சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இது தவிர வேலையின் விவரம் மற்றும் அதற்கான அரசு ஒதுக்கீடு தொகை போன்றவற்றை யாருக்கும் தெரியப்படுத்துவது இல்லை. குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்படவில்லை, தெருவிளக்குகள் எரிவது இல்லை என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கூட்டம் நடைபெற்ற பள்ளிக்கு வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரி ராம்குமார், என்ஜினீயர் நரசிம்மன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும், அடிப்படை வசதி தொடர்பான பிரச்சினைகளுக்கும் படிப்படியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அதிகாரி ராம்குமார் உறுதி அளித்தார். இதனையடுத்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்து முடிந்தது.

மேலும் செய்திகள்