ஏரியூர் அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

ஏரியூர் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் சிவனருள் விசாரணை நடத்தி வருகி்றார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-06-07 21:30 GMT
ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள புது சோளப்பாடியை சேர்ந்தவர் வேல்முருகன். பெயிண்டர். இவருடைய மனைவி கல்பனா (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை வேல்முருகன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கல்பனா மட்டும் தனியாக இருந்தார். வேலைக்கு சென்ற வேல்முருகன் மாலை வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. வேல்முருகன் வெகுநேரமாக கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்பனா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர், கல்பனாவை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது கல்பனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏரியூர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று கல்பனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் சிவனருள் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்