அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்த கோரிக்கை

வடகாடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-06-07 22:00 GMT
சத்திரப்பட்டி, 

ஒட்டன்சத்திரம் தாலுகா வடகாடு மலைப்பகுதியில் வடகாடு, பெத்தேல்புரம், புலிக்குத்திக்காடு, பால்கடை, சிறுவாட்டுக்காடு என 15 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள், விவசாயிகள் தங்களின் தேவைகளுக்காகவும், மாணவ, மாணவிகள் உயர் படிப்புகளுக்காக ஒட்டன்சத்திரம் சென்று வருகின்றனர். மேலும் பளியர், புலையர் உள்ளிட்ட பழங்குடியின மக்களும் இந்த பகுதியில் பரவலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கண்ட மலைக்கிராமங்களில் குழந்தைகள் அடிப்படை கல்வி வசதி பெறுவதற்காக பெத்தேல்புரம், வடகாடு, சிறுவாட்டுக்காடு, பால்கடை, கும்மளமரத்துப்பட்டி ஆகிய 6 கிராமங்களில் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு போதிய முறையில் கல்வி பயிற்றுவிக்கப்படவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. அதாவது கல்வித்தரம் மிகவும் குறைவாக உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மலைப்பகுதி என்பதால் சரியான நேரத்துக்கு ஆசிரியர்கள் அங்கன்வாடி மையங்களுக்கு வருவதில்லை என்றும், எனவே இங்கு இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வடகாடு பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் ஆசிரியர்கள் சரியான நேரத்துக்கு வருவதில்லை.

குறிப்பாக சிறுவாட்டுக் காடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பெரும்பாலும் பழங்குடியின மக்களின் குழந்தைகளே அதிக அளவில் படித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு போதிய அளவில் கல்வி கற்பிக்கப்படவில்லை. . எனவே இங்குள்ள அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்