13¾ கிலோ தங்க நகைகள் மாயமான வழக்கு: பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம்
13¾ கிலோ தங்க நகைகள் மாயமான வழக்கில், புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகள் 4 பேரை அதன் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை பழைய நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் மாரிமுத்து என்பவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி இவரை காணவில்லை என்று அவருடைய மனைவி ராணி கணேஷ் நகர் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், வங்கியில் கோடிக்கணக்கில் நகைகள் காணாமல் போனதாக தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து 29-ந் தேதி மாரிமுத்துவின் கார் எரிக்கப்பட்ட நிலையில் வல்லத்திராக்கோட்டை பகுதியில் போலீசார் மீட்டனர். மேலும் மாரிமுத்துவின் உடலை அழுகிய நிலையில் கோடியக்கரை கடல் பகுதியில் மீட்டனர். இதனையடுத்து வங்கியின் முதுநிலை மேலாளர் மாரிஸ் கண்ணன் டவுன் போலீசில் அளித்த புகாரில், வங்கியில் 13¾ கிலோ தங்க நகைகள் காணவில்லை என்றும், இதன் மதிப்பு ரூ.4 கோடியே 84 லட்சம் என்றும் அதில் கூறியிருந்தார்.
இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், மாரிமுத்து கடந்த 2013-ம் ஆண்டு முதல் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை கையாடல் செய்து, அதற்கு பதிலாக கவரிங் நகைகளை அங்கு வைத்து விட்டு, அதை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணத்தை பெற்று பின்னர் மீண்டும் அந்த நகைகளை மீட்டு விற்றுள்ளார். மேலும் நகைகள் உண்மையானதா? போலியானதா என்பதை வங்கியில் அதிகாரிகள் சோதனை செய்யாமல் நகைகள் உள்ள பாக்கெட்டை மட்டுமே சரி பார்த்து உள்ளனர். இதனால் மாரிமுத்து செய்த மோசடி வங்கி அதிகாரிகளுக்கு தெரியவில்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில் மாரிமுத்துவின் உடல் பிரேத பரிசோதனையில், அவரது கழுத்து எலும்பு, விலா எலும்பு ஆகியவை முறிந்த நிலையில் உள்ளதால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் போலீசார் வங்கி அதிகாரிகள், மாரிமுத்துவின் மனைவி மற்றும் அவரது உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வங்கியில் இருந்து எடுத்த நகைகளை மாரிமுத்து புதுக்கோட்டையில் உள்ள மற்ற வங்கிகள், நகை அடகு கடைகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் தனது பெயர் மற்றும் உறவினர்களின் பெயர்களில் அடகு வைத்தது தெரியவந்து உள்ளது. இதையடுத்து போலீசார் புதுக்கோட்டையில் உள்ள வங்கிகள், நகை அடகு கடைகள், தனியார் நிதி நிறுவனங்களுக்கு சென்று, அங்கு மாரிமுத்து அடகு வைத்து உள்ள நகைகளின் விவரங்களை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாரிமுத்து, அவரது உறவினர்களின் பெயரில் அடகு வைக்கப்பட்டு உள்ள நகைகளின் விபரங்களையும் சேகரித்து வந்தனர்.
இந்நிலையில் 13¾ கிலோ தங்க நகைகள் மாயமான வழக்கில் திருப்பு முனையாக புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த வங்கியின் முதுநிலை மேலாளர் மாரிஸ் கண்ணன், காசாளார் ரெங்கசாமி, அதிகாரிகள் கோபிகண்ணன், வெங்கடேஷ் ஆகிய 4 பேரை வங்கி நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உள்ளது. வங்கியில் 13¾ கிலோ தங்க நகைகள் மாயமான வழக்கில் வங்கி அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ள சம்பவம் வங்கி அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.