கோவில்பட்டியில் ரெயில் மோதி டிரைவர் பலி

கோவில்பட்டியில் ரெயில் மோதி டிரைவர் பலியானார்.

Update: 2019-06-07 22:15 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி புதுகிராமம் சிந்தாமணி நகரைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவருடைய மகன் அந்தோணி மகாராஜா (வயது 20). இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, இரவில் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். பின்னர் இரவில் அந்தோணி மகாராஜா தனது வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தை அடுத்த வேலாயுதபுரம் ரெயில்வே கேட்டுக்கும், தனியார் பள்ளிக்கூடத்துக்கும் இடையில் ரெயில்வே தண்டவாளத்தில், ரெயில் மோதி அந்தோணி மகாராஜா இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரெயில் மோதி இறந்த அந்தோணி மகாராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்தோணி மகாராஜா ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்