‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்
கேரள மாநில எல்லைகள் வழியாக தமிழகத்துக்கு ‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க எல்லைகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போடி முந்தல் பகுதியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.
தேனி,
கேரளா மாநிலத்தின் சில பகுதிகளில் ‘நிபா’ வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதால் அதன் பாதிப்பு தமிழகத்தில் ஏற்படாதவாறு, தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருமாநில எல்லைகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் செல்லும் எல்லைப் பகுதிகளான போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி மலைப்பாதை ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு மருத்துவ குழுவினர் 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் இருந்து பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர். மக்களுக்கும் நோய் பாதிப்பு உள்ளதா? என்றும் பரிசோதனைகள் நடத்தி வருகின்றனர்.
போடி அருகே போடிமெட்டு மலைச்சாலை தொடங்கும் முந்தல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார். பஸ்களிலும் பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.
இதையடுத்து கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வழிகளான குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் மருத்துவக்குழுவினர் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் தினசரி கேரள பகுதிக்கு வேலைக்கு செல்பவர்கள் ஆகியோரிடத்தில் ‘நிபா’ வைரஸ் தாக்குதல் பாதிப்பு உள்ளதா? என தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அப்போது காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அவர்களை அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகளில் உள் நோயாளியாக அனுமதித்து தீவிர சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ‘நிபா’ வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தேவையான மருந்துகளும், முன்னெச்சரிக்கை கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
வவ்வால்கள் கடித்த பழங்கள், பன்றிகள் மூலமாகவும் நிபா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புள்ளதால் பன்றி வளர்ப்பவர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற பீதி அடையவோ, அச்சம் கொள்ளவோ வேண்டாம். பொதுமக்கள் எந்த வகையான காய்ச்சல் என்றாலும் முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதுடன் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.