ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுக்க வந்த பெண்ணிடம் ரூ.1 லட்சம் நகை அபேஸ் 2 பேருக்கு வலைவீச்சு
ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுக்க வந்த பெண்ணிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகையை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அம்பர்நாத்,
தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சம்பவத்தன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த கம்லாதேவி (வயது 52) என்பவர் ஸ்கேன் எடுக்க சென்றிருந்தார். அங்கு வந்த 2 பேர் டாக்டர் மற்றும் ஸ்கேன் எடுப்பவர் என கூறி பெண்ணிடம் அறிமுகமானார்கள். இதையடுத்து 2 பேரும் பெண்ணை ஸ்கேன் எடுக்கும் அறைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் ஸ்கேன் எடுப்பதற்கு நகைகளை கழற்றி விடுமாறு அவர்கள் பெண்ணிடம் கூறினர். அதன்பேரில் பெண்ணும் தங்க நகைகளை கழற்றினார். அப்போது, இருவரும் அந்த நகைகளை வாங்கி கொண்டனர்.
வலைவீச்சு
இதையடுத்து அவர்கள் சிறிது நேரத்தில் ஸ்கேன் எடுப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். ஆனால் வெகுநேரமாகியும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கம்லாதேவி நர்சு ஒருவரிடம் கேட்டார். அப்போது, யாரோ ஆசாமிகள் இருவர் அவரை ஏமாற்றி நகையை அபேஸ் செய்து சென்றிருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கம்லாதேவி சம்பவம் குறித்து பஜார்பேத் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பெண்ணிடம் நகைகள் அபேஸ் செய்த 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.