தேன்கனிக்கோட்டை அருகே 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி 6 பேர் படுகாயம்

தேன்கனிக்கோட்டை அருகே 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் தொழிலாளிகள் 2 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-06-06 23:00 GMT
தேன்கனிக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி அருகே மல்லசந்திரம் கிராமத்திலிருந்து அஞ்செட்டிக்கு முள்வேலி அமைக்க பயன்படுத்தப்படும் கல் தூண்களை ஏற்றி கொண்டு நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை கிரு‌‌ஷ்ணகிரி பெருமாள் நகரை சேர்ந்த சிவலிங்கம்(வயது 26) என்பவர் ஓட்டி சென்றார்.

லாரியின் பின்புறத்தில் கூலித்தொழிலாளிகள் 7 பேர் அமர்ந்திருந்தனர். தேன்கனிக்கோட்டை அருகே குந்துக்கோட்டை கிராமத்தில் மலை பகுதியில் உள்ள முதலாவது கொண்டை ஊசி வளைவில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. மேலும் சாலையோரத்தில் இருந்த 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியின் அடியில் சிக்கிய 8 பேரும் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து அஞ்செட்டி போலீசாருக்கும், தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார், தேன்கனிக்கோட்டை தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

அதில் நடுபையூர் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி(30), சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த சின்னதுரை(25) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இருவரின் உடல்களையும் போலீசார் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் காயம் அடைந்த லாரி டிரைவர் சிவலிங்கம்(26), கெட்டூரை சேர்ந்த முருகன்(39), நடுபையூர் துரை(40), சிதம்பரம்(47), சுண்டேகுப்பம் சம்பத்(49), துரிஞ்சிபட்டி பிரபு(32) ஆகிய 6 பேரும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்